காவலூரின் வரலாறு
===================
#காவலூரின்_பெருமையுள்ள_பழங்குடி_மக்கள்
ஊர்காவற்றுறையின் பூர்வீகக் குடிகள் எங்கிருந்து வந்தார்கள், எப்போ இங்கு குடியேறினார்கள் என்று திட்டவட்டமாகக் கூற முடியாது போயினும், ஒரு சில பகுதியராவது தென் இந்தியாவிலிருந்து மன்னாரில் குடியேற்றப்பட்டு, அங்கிருந்து பூநகரி, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, கோவளம், நாவாந்துறை, சாட்டி, அல்லைப்பிட்டி, நாரந்தனை, ஊர்காவற்றுறை முதலான இடங்களுக்கு காலகதியில் வந்து குடியேறினர் என்று அனுமானிக்க இடமிருக்கிறது.
இப் பூவீகக் குடிகள் அனைவரும் சைவ சமயத்தவர்களேயன்றி கத்தோலிக்கரல்லர். ஏனெனில் 1600ஆம் ஆண்டிலேதான் வேத வித்து ஊர்காவற்றுறையில் வேரூன்றியது. அதற்கு முன் சைவ சமயமே தழைத்தோங்கியிருந்தது.
காலகதியில் கத்தோலிக்க மதம் கண்ணாடிச் சுவாமியாரால் இங்கு பரப்பப்பட்ட போதிலும் ஊர்காவற்றுறை மக்களிடையே பிரமுகர்களாக விளங்கிய ஒரு சிலர் தம் ஆதி சமயத்தைக் கைவிடாமலேயே சமய வைராக்கியராகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களுள் முதன்மை வாய்ந்தவர்கள் ஆண்டி அம்பலரும், ஐயப்பனாருமாவர். தற்போது ‘அம்பலப்புலம்’ என அழைக்கப்படும் பகுதி முழுவதும் அக்காலத்தில் ஆண்டி அம்பலருக்கே சொந்தமாக இருந்தது. அதனாலேயே, அம்பலர்–புலம், அம்பலப்புலமாக மாறியதெனலாம். இவ்வண்ணமே ஐயப்பனாருக்கும் ஏராளமான காணிகளும் இருந்திருக்கின்றன. இன்றைக்கும் ஐயப்பன் தோட்டம் என்று பெயர் வழங்கும் காணியும் காவலூரில் இருக்கிறது. மேற்படி ஆண்டி அம்பலனாரின் மகன், பேதுறுதே பெற்றக்கோன் எனும் கத்தோலிக்கக் குருவானவரால் ஞானஸ்நானம் பெற்று, ‘மத்தேசு’ என்னும் பெயர் பூண்டு மேற்குப் பகுதி பெண் ஒருவரைத் திருமணம் செய்தார். இதுவே அம்பலப்புலத்துக்கும் மேற்குப் பகுதியாருக்கும் எற்பட்ட முதல் சம்பந்தமாகும். இப்பெயரால் வெட்டப்பட்ட நீரோடையொன்று இன்றைக்கும் ‘மத்தேசு வாய்க்கால்’ என அழைக்கப்படுகிறது.
மேலும் ஊர்காவற்றுறையில் குடியேறிய பூர்வ குடிபதிகளில் முதலி வங்கிஷமும் ஒன்றாகும். போதுக்கேயரோடு சம்பந்தம் செய்தபடியால் இவர்கள் ‘பறங்கியர்’ என்னும் பட்டப் பெயரோடு அழைக்கப்படலானார்கள். இவர்களின் பூர்வீகத் தொழில் நெசவாகும். பருத்தி விளைச்சல் ஊர்காவற்றுறையில் அதிகமாக இருந்தபடியாலும் போத்துக்கேயரின் சலுகைகள் இக்குலத்தவர்களுக்கு உண்டானதாலும் இவர்களின் நெசவுத் தொழில் பல வழிகளிலும் மேம்படலாயிற்று. காலகதியில் சேலைகளுக்கு ஒருவித வேரினால் சாயம் தோய்க்கவும், வேலைப்பாடுகள் போடவும் கற்றுக்கொண்டதால் ‘வேர் குத்தும் பறங்கியர்’ என பிறிதொரு பட்டப் பெயரையும் பெறலானார்கள்.
இக்குலத்தவர்கள் நெடுந்தீவிலும் புங்குடுதீவிலும் வண்ணார்பண்ணையிலும் பரந்து வாழ்ந்தார்கள். இவர்களுள் தலைமையாக விளங்கியவர் வீரசிங்க முதலி ஆவார். இவர் நெடுந்தீவில் தலைமை அதிகாரியாக இருந்தார். இம்முதலி வம்சத்தாரின் செல்வாக்கையும் பண்டைப் பெருமையையும் எடுத்துக்காட்ட நெடுந்தீவில் சரித்திரச் சான்றுகள் பலவுண்டு. ஊர்காவற்றுறை மேற்கு வட்டாரம் முழுவதும் இவர்களுக்கே சொந்தமாக இருந்தது என்பதற்குச் சான்றாக பழங்கால உறுதிகளில் பறங்கித் தோட்டம், பறங்கி வளவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையைக் காணலாம். பறங்கியர் என அழைக்கப்பட்டு வந்த இவர்கள் முதலி வம்சத்தவர்களின் பரம்பரையினர்.
#ஆதித்_தொழில்_வர்த்தகம்
ஊர்காவற்றுறை மக்கள் இங்கு குடியேறிய காலத்திலிருந்தே கடல் தொழிலை மட்டுமே தம் சுய தொழிலாகக் கொண்டிருக்கவில்லை. இவர்கள் ஆதியில் செய்து வந்த தொழில் வர்த்தகமும் கமமுமாகும். நாரந்தனையில் குடியேறிய காலத்தில் அவர்கள் ஆட்டு மந்தைகள் வைத்து துளுக்கரின் மரக்கலங்களின் உதவியோடு பூநகரி மார்க்கமாக புத்தளம் சென்று அங்கிருந்து கொழும்பு, காலி முதலிய இடங்களுக்குச் சென்று தம் ஆடுகளை விற்று வியாபாரம் செய்தனர். ஏராளமான ஆட்டு மந்தைகளும் பட்டிகளும் இவர்களுக்கு இருந்ததைக் காட்ட இன்றைக்கும் இவர்களின் எல்லைக்குள்ளே ஆட்டுப்பட்டி என்னும் பெயர் கொண்ட காணியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தளம் சென்ற அவர்கள் வியாபாரம் செய்யும்போது ஒருமுறை ஆற்றுப் பெருக்கால் ஏற்பட்ட அபாயத்தை வியாபாரம் செய்து வீடு வந்ததும் கணவன் தன் மனைவிக்கு பின்வரும் நாட்டுபுறப் பாடல் மூலம் தெரிவிக்கிறார்.
‘போதுமப்பா போதும் புத்தளத்து யாபாரம்
பொன் பெருக்கியாற்றாலே போக வரக்கிட்டாதே’
இதனால் அவர்கள் புத்தளம் சென்று வியாபாரம் செய்தது தெரிய வருகிறது. அன்றியும் இவர்கள் தனித்து வியாபாரம் செய்யாமல் கூட்டமாகவும், பங்காகவும் செய்தனர் என்பதற்கும்
‘எண்ணியிறசாலை எடுத்திடடி சின்னாச்சி
இன்னாசியாளுக்கும் இதிலை ரண்டுபங்குண்டு’
எனும் நாட்டுப்புறப் பாடல் வரிகளால் இவர்களது பூர்வீகத் தொழில் வர்த்தகம் என்பது புலனாகிறது. ‘இறசால்’ என்பது அக்காலத்தில் பாவிக்கப்பட்ட நாணயத்தின் பெயராகும்.
ஆரம்பத்தில் நாரந்தனையில் வந்து குடியேறியோர் காலம் செல்லச் செல்ல, கடல் கடந்து இன்னும் பலவித வியாபாரம் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தாலும், துளுக்கருடன் உறவாடி கப்பல் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தாலும் ஊர்காவற்றுறையை தம் தாயகமாகக் கொள்ளலானார்கள். ஊர்காவற்றுறையில் வந்து குடியேறிய பின்னும் இவர்கள் வியாபாரத்தைக் கைவிடவில்லை. ஆனால், ஆட்டு வியாபாரத்தைக் கைவிட்டு சங்கு, சிப்பி முதலிய வியாபாரத்தில் ஈடுபடலானார்கள். இவர்கள் இத் தொழிலை நடத்துவதற்கு, பாம்பன், அக்கா மடம், தங்கச்சி மடம் ஆகிய இடங்களிலிருந்து சோனகர்களை தருவிக்கலானார்கள். ஊர்காவற்றுறை மக்கள் வெகு காலமாக இவ்வியாபாரத்தை தொடர்ந்து செய்திருக்கிறார்கள். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் பகுதியில் திரு.பர்ணாந்து, திரு.முத்தையா ஆகியோர் இவ்வகையான வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கடல் கடந்து வியாபரம் செய்தமையால் துளுக்கர், போர்த்துக்கேயர் முதலிய பிற நாட்டாரின் நல்லுறவு ஏற்பட்டதால் வியாபாரத்தை மெல்ல மெல்லக் கைவிட்டு கப்பல் தொழிலிலேயே தம் முழுப் புலனையும் செலவழிக்கலானார்கள்.
#கப்பலோட்டும்_தொழில்
ஊர்காவற்றுறை மக்கள் கப்பல் தொழிலை அறிய வேண்டியதற்கு மூல காரணம் அவர்களது கடல் கடந்த வர்த்தகமும் துளுக்கர், போர்த்துக்கேயரின் நல்லுறவுமேயாகும். இவர்கள் போத்துக்கேயரோடு அதிகம் உறவாடியமையால் அவர்களின் மதம், கலாசாரம், பழக்கவழக்கம், உணவு, உடை முதலியவற்றை பின்பற்றலானார்கள். அன்றியும் கோயில் அலங்காரம், சிற்ப வேலை, மாலுமி வேலை இன்னும் பிற நவீன கைத்தொழில்களையும் அவர்களிடமிருந்து அறிந்து கொண்டார்கள். காலஞ் செல்லச் செல்ல துளுக்க மரக்கலங்களிலும், போத்துக்கேயரின் கப்பல்களிலும் பல்வேறு தொழில்களைப் பெற்று பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யலானார்கள். இவர்கள் போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே கப்பல் தொழிலைக் கற்றுள்ளனர் என்பதற்கு சான்று பகர ஒருசில நாட்டுப்புறப் பாடல்களும் உண்டு.
‘பாய் பூட்டிக் கப்பலிலே எங்கட மச்சான் – வெள்ளைப்
பறங்கியரோடு வாறான் எங்கட மச்சான்’
இந்நாட்டுபுறப் பாடலைக் கொண்டு ஒரு பெண்மணி தன்னரிய மச்சான் கப்பலில் சென்றிருக்கிறார், அதிலும் பறங்கியருடன் போயிருக்கிறார் என்று பெருமிதத்துடன் கூறுவதை நாம் அறிகிறோம். மேலும் தனது மைத்துனன் எங்கெங்கு சென்று வருகிறாரென்பதையும் வெகு அழகாக விபரிக்கிறாள்.
‘கொடி போட்டு ஓடிவாறான் எங்கட மச்சான் – சீமை
கொச்சி கொல்லம் பார்த்து வாறான் எங்கட மச்சான்’
இதிலிருந்து அவர்கள் அக்காலத்திலிருந்தே பிற நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள் என்பது உண்மையாகிறது. அன்றியும் பிற இடங்களுக்குச் சென்று திரும்பி வரும்போது தனக்கு என்னென்ன சாமான்கள் வாங்கி வருகிறார் என்பதையும் சொல்லி முடிக்கிறாள்.
‘பட்டுகள் கொண்டு வாறான் எங்கட மச்சான் தீனிப்
பண்டங்களும் கொண்டு வாறான் எங்கட மச்சான்’
இதனால் காவலூர் மக்கள் முதன் முதலில் பட்டுடுத்தி அழகு பார்த்திருக்கிறார்கள் என்பதும் புலனாகிறது.
#செட்டிமார்_வர்த்தகம்
போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் தமது ஆட்சிக் காலம் முடிந்து மரக்கலமேற அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர் வந்து இத்தீவை ஆட்சி செலுத்தினர். ஆங்கிலேயரின் காலத்திலேதான் ஊர்காவற்றுறை மக்களின் கப்பலோட்டும் சிறப்பு நாலா திக்கிலும் அதிகம் பரவலாயிற்று. ஒரு காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடந்த கடல் கடந்த வர்த்தகம் ஊர்காவற்றுறை மாலுமிகளின் பொறுப்பிலேயே நடந்ததெனக் கூறினால் அது மிகையாகாது. ஏனெனில் வட மாகாணத்திலோ, அன்றேல் ஈழ மண்டலத்திலோ, தமிழரிலோ அன்றேல் சிங்களவரிலோ இவர்களுக்கு முன் பேர்பெற்ற மாலுமிகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், கால கதியில் பல நாட்டவர்களும், பல துறையாரும் இவர்களை அண்டிப் பிழைத்து அவர்களின் கப்பல்களில் சென்று பண்டாரி, கிலாசு முதலான பதவிகளை வகித்து படிப்படியாக தண்டல்மார்களாக வந்தர்கள் என்பது கண்கூடு. எனினும், இலங்கைத் தீவில் முதன்முதல் கப்பலோட்டிய தமிழன் காவலூரானே என்று பெருமையுடன் கூறுகின்றேன். நாராந்தனையைச் சேர்ந்த திரு.சீனித்தம்பி அவர்கள் லண்டன் துறைமுகத்தில் பிரசித்தம் வாய்ந்த கப்டனாக தொண்டாற்றியது காவலூர் மக்களின் கப்பலோட்டும் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. அவர் லண்டனில் காலமானார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வர்த்தகம் செய்வதற்காக, சீர்காழி, சிதம்பரம், தேவகோட்டை, புதுக்கோட்டை, நாட்டுக்கோட்டை முதலிய இடங்களிருந்து செட்டிமார்களும், பாரிய வர்த்தகர்களும் இலங்கைக்கு வரலாயினர். அவர்கள் இங்கு வந்து ஊர்காவற்றுறை மக்களை உறு துணையாகக் கொண்டு தங்கள் மரக்கலங்ளை இவர்களிடம் ஒப்படைத்து வர்த்தகத்தை ஆரம்பித்தார்கள். இம்மாலுமிகள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மரக்கலங்களைக் கொண்டு கொல்லம், கொச்சி, ஆலப்புளை, மங்களபுரம் முதலிய இடங்களிருந்து உப்பு, ஓடு, நெல் முதலிய பொருட்களையும், அதிராம் பட்டணம், முத்துப் பட்டணம், வேதாரணியம், பரங்கிப்பேட்டை, மதராஸ் முதலான இடங்களிலிருந்து அரிசி, கொத்தமல்லி, மிளகாய் போன்றவற்றையும், கல்கத்தா, சட்டிகாமம், கராச்சி, அரக்கன், அக்கியாப்பூர், மோர்மாங், சிங்கப்பூர் ஆகிய இடங்களிலிருந்து நெல், தேக்க மரம் முதலிய விலையுயர்ந்த பொருட்களையும் இலங்கைத் தீவுக்குக் கொண்டுவந்து இறக்கினர். ஏறத்தாழ 1950ஆம் வருடம் வரை இவர்கள் பொறுப்பிலிருந்து ஊர்காவற்றுறை துறைமுகத்தை அலங்கரித்த கப்பல்கள் பின்வருமாறு:
சாமிநாதபுரவி, வீரலெட்சுமி, விக்டோரியா, நீலாதாச்சி, ஆமின் படகு, சுப்பிரமணிய புரவி, கதிரேசன், பச்சைக் கப்பல், ஜெபராளம், சந்தலேனாள், மீனாட்சி சுந்தரம், காசி அன்னபூரணி, விசாலாட்சி, தாரா, ஸ்டார் ஒப் கல்கத்தா, கெசவாடா, சிக்கண்டர்ஸா, கனகந்துறக்கா, பத்துரைமா, பாக்கியலட்சுமி, அ-மு, சிவகாமி லட்சுமி, ஆனந்தவல்லி, குது பாலம், சதுர் குதுல்புதாரி, மம்மி கப்பல், சிறிமா லெட்சுமி, திருஞானசம்பந்த புரவி, சாரங்கபாணி, செல்வநாயகி, மரியபவுலீனா, றெஜீனா, மரியோச்சேப்பினா, இம்மனுவேல், கித்தானா, வீரலெட்சுமி, கந்தசாமி புரவி, மொனிஸ்டர், டுக்கேசன், அறவளத்தம்மன், யோசேப்பினா, பாட்டியாபோட்டு, பெமலி, வேலாயுதபுரவி, வீர்ச்சமரிய கொங்கறின், அரபியா, யோண்மேரி, மம்மதுசவுதானி, அகமதுசவுதானி, உப்புச்சத்திரம், கோனாபடகு, தெய்வநாயகி, கெச்சி, சூமரவிஜயன், பிறைவந்தமரிய, ராசம் படகு, கொடிபிடுங்கி, தைரியலெட்சுமி, மாணிக்கத்தியார், அழகியநாயகி, செய்யது மம்மதுபாஸ், பரிபூரண கலியாணலெட்சுமி, வெள்ளநடான் உரு.
மேற்கூறிய கப்பல்கள் மாத்திரமல்ல இன்னும் அநேக கப்பல்கள் ஊர்காவற்றுறை தண்டல்களின் பொறுப்பிலிருந்து பிற நாட்டு வர்த்தகம் நடத்தி வந்தன. இவ்வர்த்தகம் நடத்திய கப்பல்களையும் தண்டல்மார்களையும் முதலாளிமார்களையும் ஆய்வுக்கு எட்டிய வரை இவ்வேளை குறிப்பிடுதல் பொருத்தமாகும். ஊர்காவற்றுறையில் குடியேறிய வீரசிங்க மத்தேயு முதலியின் சந்ததியார் கைத்தொழிலிலும், கமத்தொழிலிலும் மாத்திரம் கைதேர்ந்தவர்களல்லர். கப்பலோட்டுவதிலும் வெகு திறமைசாலிகளாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஆதிக்கத்தில் இருந்த விசேஷ கப்பல்களும், பிரபல்யம் வாய்ந்த தண்டல்மார்களும் பின்வருமாறு:
#தண்டல்மார்களின்_பெயரும்_கப்பல்களின்_பெயரும்
சஞ்சுவான் அந்தோனி – மரிய பவுலீனா
மரியான் சஞ்சுவான் – றெஜ்ஜீனா
சுவக்கீன் தானியேல் – மரிய யோசேப்பினா
சுவக்கீன் பர்ணாண்டோ – இம்மனுவேல்
அந்தோனி கபிரியேல் – கித்தானா
அந்தோனி சவிரி – வீரலெட்சுமி
அந்தோனி சவிரி – கந்தசாமி புரவி
இஞ்ஞாசி தானியேல் – மொனீஸ்டர்
இஞ்ஞாசி நசரேத் – டுக்கேசன்
பிலிப்பு மரிசிலீன் – அறவளத்தம்மன்
வயித்தியான் சீனிமுத்து – யோசேப்பினா
அகுஸ்தீன் தொம்மன் – மணிய புரவி
சுவக்கீன் மனுவல் – கதிரேசன்
சவிரி அந்தோனி – பாட்டியா போட்டு
சவிரி அந்தோனி – பெமலி
சவிரி வைத்தியான்,ஜேக்கப் கபிரியேல் – வேலாயுத புரவி
அந்தோனி தியாகு, பேதுறு குரூஸ் – வீர்ச்ச மரிய
இவர்களுள் ஊர்காவற்றுறை கிழக்கில் வசித்த பிரபல வைத்தியரான அந்தோனி சந்தியோகுக்குச் சொந்தமாக இரு படகுகளும் இருந்திருக்கின்றன. அப்படகுகளில் சவிரி சீனிமுத்தும், மனுவேல் அந்தோனியும் தண்டல்மாராகக் கடமையாற்றியுள்ளனர். இப்பகுதியார் கப்பலோட்டுவதில் அதிக திறமைசாலிகளாக இருந்தாலும், ஏனைய ஊர்காவற்றுறை மக்களைப் போல் தொடர்ந்து அத்தொழிலைக் கைக்கொள்ளாதபடியால் அவர்களுடைய செல்வாக்கு உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாயிற்று. இது விசனத்துக்குரிய சம்பவமாகும்.
#கப்பலோட்டிகளும்_அவர்களது_திறமைகளும்
ஊர்காவற்றுறை நகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி கரம்பொன் பகுதியைச் சேர்ந்த பலரும் கப்பலோட்டிகளாக பணியாற்றியுள்ளனர். உதாரணமாக கரம்பொன்னைச் சேர்ந்த செல்லப்பா, தாமோதிரி, வஸ்தியாம்பிள்ளை, சவிரி, முத்துத்தம்பி, மரியாம்பிள்ளை, தம்பையா ஆகியோர் கப்பல் தொழிலில் ஈடுபட்டிருந்தது மட்டுமன்றி பிற நாடுகளுக்கும் பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் மரியாம்பிள்ளை அவர்கள் கொழும்பு துறைமுக ஆணையகத்தில் (போட் கொமிஷன்) 300க்கும் மேற்பட்ட கம்மாறருக்கு தலைமை அதிகாரியாக பணி புரிந்தமை பெருமைக்குரிய ஓர் விடயம்.
அது மட்டுமன்றி தம்பையா அவர்கள் அமெரிக்கா, ஒஸ்ரியா, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், பினாங்கு(மலேசியா) முதலான இடங்களுக்கு சிப்பந்தியாகச் சென்றிருப்பதுமல்லாமல் ஷெல் கம்பனியின் கப்பலொன்றில் மாஸ்ரராகவும் தொண்டாற்றியுள்ளார். அதனால் நாம் அறியக்கிடைப்பது என்னவெனில் அக்காலத்தில் ஊர்காவற்றுறை துறைமுகத்தில் வர்த்தகம் அதிகம் நடைபெற்றுள்ளதென்றும், வருவாய் கருதி பலரும் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளனரென்றும் கருத இடமுள்ளது. அன்றியும் பிற நாட்டு வர்த்தகர்களும் கப்பல் முதலாளிகளும், ஏனைய நாட்டு மாலுமிகளிலும் பார்க்க ஊர்காவற்றுறை மாலுமிகள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்ததும், இப் பகுதி மக்கள் கப்பல் தொழிலைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக இருந்திருக்கிறது எனலாம். இதற்கு உதாரணமக தூத்துக்குடி வெள்ளையப்பபிள்ளையின் கந்தசாமி புரவியும், கப்டன் யம்போ என்னும் பறங்கியரின் மொனிஸ்ரரும், காயல் பட்டணம் கோஸ் மம்மதுவின் பெமலியும், அ.ச.மு. முதலாளியின் வீர்ச்ச மரியவும், வன்னதுசன் என்னும் மற்றுமொரு பறங்கியரின் சதுக்குதுல்புதாரியும், செபலெட்சுமியும், நவாலி தம்பிப்பிள்ளை முதலாளியின் குதுபாலனும், சந்தலேனாவும், பேருவளை சார்ளிஸ் பெரைராவின் மீனாட்சிசுந்தரமும், கஸ்தூரிநாயக்கரின் ஸ்ரார் ஓப் கல்கத்தாவும், ரெங்கசாமியின் அன்னபூரணியும் இன்னும் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களின் கப்பல்கள் பலவும் பல வருடங்களாக ஊர்காவற்றுறை மக்களின் ஆதிக்கத்திலேயே இருந்தன. ஆனால் இவர்கள் கப்பலோட்டும் தொழிலில் அக்கறையற்றுப் போன பின்பே அவை பிற நாட்டாரின் கைகளுக்குச் சென்றன. இதனால் பறங்கியர் தொடக்கம் சிங்களவர், சோனகர், செட்டிமார், யாழ்ப்பாணத்தவர் ஈறாகவும், நவாலி தொடக்கம் வட நாடு வரைக்கும் ஊர்கவற்றுறை மாலுமிகள் எவ்வண்ணம் மதிக்கப்பட்டு வந்தார்கள் என்பது நன்கு புலனாகிறது. அன்றியும் ஊர்காவற்றுறை மக்களும் அடைப்பனார், தொம்மைக்குட்டி, கொன்ஸ்தாந்தின், கறுவல்பிள்ளை, சேதுப்பிள்ளை, சூசைப்பிள்ளை உடையார், தம்பிஐயா, ஓவசியர் அந்தோனிப்பிள்ளை ஆகியோரும் கப்பல் தொழிலில் சிறந்து விளங்கினர்.
#சார்ளிஸ்_பெரைராவும்_மீனாட்சிசுந்தரமும்
சிங்களவர்களில் கப்பல்களை சொந்தமாக வைத்திருந்தவர்களில் அதிகம் பிரசித்தமானோர் மொரட்டுவை பாபா சிங்கோ வேந்தனாரும், பேருவளை சார்ளிஸ் பெரைரா முதலாளியுமாவர். இவ்விருவரில் அதிகம் பிரபலம் வாய்ந்தவர் சார்ளிஸ் பெரைரா முதலி ஆவார். இவர் பௌத்த சமயத்திலிருந்து பின் கத்தோலிக்க சமயத்தைத் தழுவியவர். இவர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவிய காலத்தில் பேருவளையில் கொழும்பு அதிமேற்ராணியாரான காலஞ்சென்ற அந்தோனிக்குடோர் ஆண்டவர் அவர்கள் பேருவளையில் கட்டளைக் குருவாகக் கடமையாற்றினார். கட்டளைக் குருவாய் இருந்தபோது சார்ளிஸ் பெரைரா முதலாளியிடம் தமக்குண்டாயிருந்த பற்றுதலால் “தான் எங்கிருந்தாலும் உமது மகளின் திருமணச் சடங்கை பேருவளைக்கு வந்து நானே நிறைவேற்றி வைப்பேன்” என வாக்களித்திருந்தார். இவர் வாக்களித்தவாறே கொழும்பு அதிமேற்றாணியாராக நியமனம் செய்யப்பட்ட பின், சார்ளிஸ் பெரைராவின் மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை அந்தோனிக் குடோர் ஆண்டவர் அவர்களே நிறைவேற்றி வைத்தார். சார்ளிஸ் பெரைரா முதலாளி இறந்ததும், அன்னாரது சடலம் பேருவளை புனித லாசர் முனீந்திரன் ஆலயத்தினுள்ளே அடக்கம் செய்யப்பட்டது. இவ்விதம் பிரபல்யம் வாய்ந்த சார்ளிஸ் பெரைரா முதலாளிக்கே ‘மீனாட்சிசுந்தரம்’ என்னும் கப்பல் இருந்தது. இக்கப்பலை சார்ளிஸ் பெரைரா அவர்கள் தமக்கிருந்த செல்வாக்கால் பிற நாட்டு ஆங்கிலேயரை அல்லது மாலுமித் தொழிலில் பிரபலம் வாய்ந்த வடநாட்டுத் துளுக்கரை வரவழைத்து தன் கப்பலுக்கு மாலுமியாக நியமித்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாது இவர்கள் எல்லோரையும் விட ஊர்கவற்றுறை மாலுமிகளே திறமை மிக்கவர்களும், நம்பிக்கை உள்ளவர்களுமென திடவிசுவாசத்துடன் தீர்க்கமாக முடிவு செய்து ஊர்காவற்றுறை கிழக்கைச் சேர்ந்த சின்னமுத்தர் ராசம்பிள்ளை என்பவருக்குத் தன் கப்பலை ஒப்படைத்தது பெருமைமிகு சம்பவமாகும். இக் கப்பல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு துறைமுக வாசல் தென்பட்டது முதல் துறைமுகத்துள் வந்து நங்கூரம் பாய்ச்சு மட்டும் கப்பலிலிருந்து பீரங்கி சுடுவது வழக்கம். இவ்வழக்கம் யுத்தக் கப்பல்களில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இக்கப்பலில் பலசரக்குடன் சட்டாப் பாய்களும் ஏற்றி வருவது வழக்கம். ஒருமுறை சங் பிறதர் போல் அவர்களுக்கு ஒன்றிரண்டு சட்டாப்பாய் தேவைப்பட்டிருக்கிறது. அவர் தம் விருப்பத்தை இக்கப்பலின் மீகாமாரான ராசம்பிள்ளை அவர்களுக்கு ஒரு வெண்பா மூலம் தெரிவித்துள்ளார்.
அவ்வெண்பா வருமாறு:
‘எட்டாத தூரத்திலிருக்கின்ற வோர்துரைக்கு
சட்டாப்பாயொன்றிரண்டுதான் வேண்டும் – இட்டமதாய்
மீனாட்சிசுந்தரத்தின் மீகாமாரே யனுப்பும்
நானாட்சி கொள்ள நயந்து’
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ‘சுதேச நாட்டிய’ பத்திராதிபரும் யாழ்ப்பாண வைபவமுதி என்னும் நூலின் ஆசிரியருமான கதிரவேற்பிள்ளை அவர்கள் அவுறாம்பிள்ளை என்பவரோடு உரையாடிக் கொண்டிருந்தார். கதிரவேற்பிள்ளையும் அவுறாம்பிள்ளையும் நெருங்கிய நண்பர்கள். இவர்களின் உரையாடல் தொடர்ந்து நடைபெறும்போது சவுதானிக் கப்பலின் தண்டலும் அச்சமயம் வந்திருந்தார். அவர் வந்ததும் தனது கப்பல் பிரயாணம் இன்ன நாளென்பதை அவுறாம்பிள்ளைக்குக் கூறினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த கதிரவேற்பிள்ளை அவர்கள் உடனே ஒரு கவி எழுதி சவுதானித் தண்டலிடம் சமர்ப்பித்தார்.
அக்கவி வருமாறு:
‘வங்காளம் கொல்லம் வடநாடு சீமை
வங்க மோட்டிச் சென்று வாணிபஞ்செய்து
சிங்காரமாகவுன் தாயகம் தன்னில்
சேமமுடன் வந்து சேர்ந்திடும் போது
மங்காத நல்லதோர் பங்களூர்ப்பட்டும்
மாப்பிள்ளைக் குல்லாயுடன் சால்வை யொன்றும்
தங்காமல் வாங்கி வாரும் சவுதானித்
தண்டலே வந்தவுடன் பணந்தாறேன்’
சவுதானி என்பது ஒரு கப்பலின் பெயர். அதிலும் மம்மது சவுதானி, அகமது சவுதானி என இரண்டு கப்பல்களுண்டு. அதில் எந்த சவுதானி என்பது தெரியவில்லை. எதுவாயிருந்தாலும், வர்த்தகர்கள் மட்டுமல்ல வித்துவான்களும் புலவர்களும் கூட நமது மாலுமிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் நட்பைப் பெற்றுள்ளனர் என்பது தெரிகிறது.
#பிற_இடங்களில்_செய்த_தொழில்
ஊர்காவற்றுறை மக்கள் கடல் கடந்து கப்பலோட்டியது மாத்திரமல்ல தரகு வேலை, ஆசிரியத் தொழில், கொந்தராத்து வேலை போன்ற பிற தொழில்களும் செய்திருக்கிறார்கள். நாகபட்டணத்து ஆரிய நாட்டுச் செட்டிமார்கள் தமது பள்ளிக்கூடத்துக்கு ஓர் ஆசிரியர் தேவைப்பட்டபடியால், ஊர்காவற்றுறை கிழக்கைச் சேர்ந்த பஸ்குவால் அவர்களை தம் நாட்டுக்கு அழைத்து அங்கு ஆசிரியராக நியமித்தனர். அவர் பல வருடங்கள் அங்கு கடமையாற்றியுள்ளார்.
அப்பட்டணத்திலே ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துக்குத் தரகராக இருந்தவரும் காவலூர் கிழக்கைச் சேர்ந்த திரு.வஸ்தியாம்பிள்ளை என்பவராவார். சிங்கப்பூர், பினாங்கு, நாகபட்டணம், சட்டிகாமம் ஆகிய இடங்களில் குத்தகைகள் எடுத்து நடத்தியவரும் மதியாசர் எனும் காவலூர் கிழக்கு வாசியே. இவரே ‘ரெத்தின மாளிகை’ என்னும் கிட்டங்கியைக் கட்டியவர். அன்றியும் சிங்கள ஊராகிய அவிசாவளையில் இவர் வெகு காலம் வரை சுருட்டு வர்த்தகத்திலே ஈடுபட்டுச் செல்வந்தராய் விளங்கியவர். இதனாலேயே அவரது திருமணத்தன்று தோழிகள் இவரை வியந்து கூறும்போது:
‘மூன்று தங்கைமார்களுக்கு, முதற் பிறந்த வர்த்தகனார்
தெய்வேந்தர வேஷமிட்டுத் தேவியகம் செல்வதற்கு
பாதத்தில் வீரதண்டை, பாப்பீசும் பட்டாடை
சட்டையின்மேல் பட்டுறுமால், சருகை ஒளி வீசுதம்மா
கூசாமல் பார்மயிலே, கோலமுள்ள மாப்பிளையை’
என்று கூறியுள்ளார்கள். அன்றியும் அக்காலத்திலே முதம் முதல் ஊர்கவற்றுறையில் நான்கு அறைகளுடன் கூடிய கல் வீடு கட்டி ஓடு போட்டு வாழ்ந்தவர் காவலூர் கிழக்கைச் சேர்ந்த பிள்ளை என்பவர். அவரது கல் வீடு இருந்த இடத்திலேயே தற்போது புனித அந்தோனியார் கல்லூரி அமைந்துள்ளது.
(இக்கட்டுரை ஊர்காவற்றுறை சமூக சேவா சங்கத்தால் 1953ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ‘தீவக ஜோதி’ என்னும் மாதாந்த சஞ்சிகையின் முதலாம், இரண்டாம் இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டது.)
நன்றி : Kayts இணையம்
(இக்கட்டுரை C.L.சிசில் அவர்களால் திருத்தம் செய்யப்பட்டு இத்தளத்தில் பதிவேற்றப்பட்டது.)
Monthly Archives: March 2018
Kaavaloor Thendral Theva’s Poem.
இரத்தினத் துபீபத்தின் இரத்தினம்
சப்த தீவுகளின் தலைனகரதன்
சிறப்பினை வடிக்க வார்த்தைகளேது!
தாயை நேசிக்கும் அனைவரும் நம்
மண்ணை நேசித்தல் கடமையடா!
பாலும் தேனும் ஓடாவிடினும்
பாசம் நேசம் பாயும் அருவியடா!
கடலுக்கு நடுவே கடற்கோட்டை
கரையினை அண்டிப் பழங்கோட்டை
உல்லாசப் பயணிகள் அனைவரையும்
உவர்ந்துள்ளீர்த்த சொர்க்கமடா!
ஆலயமணி ஓசையும்அடுக்கிடும்சேவலின் கூவலும்
விடியலைக் காட்டும் விந்தையடா!
காலை உதயம் கண்ணுக்குக் குளிர்ச்சி
குபீரெனப் பாயும் கடலலைகளின் எழுச்சி
மடந்தையர் கொடியிடை கலயம் தாங்கி
மண்குளி நோக்கிய ஊர்க்கோலம்
பட்டாம் பூச்சிகள் படையெடுப்பது போல்
பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு
நான்கு கோயில்கள் அரண் அமைக்க
நடுவினில் அழகிய சிறு நகரம்
கோடையில் வரட்சியாயிடினும்
குணத்திலே உயர்ந்த குடிமக்கள்
படித்த பண்டிதர் பாமரரென
பாகுபாடு அற்ற சமூகமிது.
குக்கிராமங்கள் புடை சூழ
குன்றத்திலே குமரன் வீற்றதுபோல்
நான்வகை அறிஞர் ஆயர்களென
அதிசயிக்க வைத்த கல்லூரி
தீவுப்பகுதியின் சிகரம் என்று
திடத்துடன் நிமிர்ந்த நம் கல்லூரி
அந்தோனி என்ற பெயரினைத் தாங்கி
அழகிய முத்திரை பதித்த கல்லூரி,
மகளீர் மட்டும் பாடம் கற்க
மத்தியில் மரியாள் பாடசாலை
இந்து மக்களின் இறை பக்தியை
எடுத்தியம்பிடும் சிவன் கோயில்
குருக்கள் கன்னியர் துறவிகளென
குறிப்பிட முடியாக் கணக்கு அது
அறிஞர்கள் கலைஞர்கள் ஆசான்களென
அடுக்கடுக்காய் அடுக்கிடலாம்
திரைகடலோடிய மாலுமிகள்
சிறப்புடன் மிளிர்ந்த நகரமிது.
கடற்கரைக் காற்றும் தாலாட்டும்
கள்ளுத் தவறணைதனிலே கரை புரளும்
சூரிய அஸ்தமனத்தினைக் கண்டு
குதூகலித்திடும் இளவல்களும் உண்டு.
அவசர உலகில் அனைவருமே
அன்புடன் செய்யும் அர்ப்பணிப்பு
அறவழி நழுவா மக்களைக் கண்டு
ஆனந்தப்படுவதில் அலாதி நயம்.
நிறை குளத்தில் நீச்சல் போட்டதில்
நிஜ வாழ்க்கையிலும் எதிர் நீச்சல் .
வசதி வாய்ப்பற்ற மக்களுக்கென்று
வடக்கு றோட்டினில் வைத்தியசாலை
வசதிகள் இலவசமாய்க் கிடைத்தும்
வசதியாய் வாழத் தெரியாமல்
அக்கரைப் பச்சையை நம்பியிங்கே
அல்லல்படுகின்றோம் நாமிங்கே.
போரின் வடுக்கள் தெரிந்தாலும் – புதுப்
பொலிவுடன் துலங்கும் காவலூரின்
பெருமைதனை எடுத்தியம்பிப்
பேரானந்தம் கொள்கிறேன்.
சொல்லிலடங்கா சொர்க்கத்தை
தொலைத்துவிட்ட பாவிகள் நாம்
மீண்டும் கூடிக்குலாவிக் குதூகலிக்க
ஆண்டவன் அருளினை வேண்டி நிற்போம்.
காவலூர்த் தென்றல் தேவா.